தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
சென்னை, 31 மே (ஹி.ச.) தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல்
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - தமிழகத்தின்  17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை


சென்னை, 31 மே (ஹி.ச.)

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், ஜூன் 1-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 2 முதல் ஜூன் 5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழகத்தை பொறுத்தவரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழைக்கான சாதகமான சூழல் மிக வேகமாக உருவாகி வருகிறது.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் போக்கு வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் முறைப்படி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கேரளா மற்றும் தமிழக மேற்கு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து பரவலான மழையை கொடுக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 85 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 8 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கோவை மாவட்டம் தோலம்பாளையத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b