Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத் , 31 மே (ஹி.ச.)
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்றுகள் முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில், ஐ.பி.எல். 2026 சீசனின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி, முதலாவது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்சை பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மறுபுறம், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, லீக் சுற்றில் 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் பெங்களூருவுக்கு சமமாக இருந்தபோதிலும், நெட் ரன் ரேட்டில் பின்தங்கியதால் 2-வது இடத்தைப் பெற்றது. முதல் தகுதிச்சுற்றில் பெங்களூருவிடம் தோல்வியடைந்த அந்த அணி, 2-வது தகுதிச்சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது.
இரு அணிகளும் சமபலத்துடன் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெங்களூரு அணியில் விராட் கோலி, ரஜத் பட்டிதார் உள்ளிட்ட வீரர்களும், குஜராத் அணியில் சுப்மன் கில், சாய் சுதர்சன், ரஷித் கான் உள்ளிட்ட வீரர்களும் கவனம் ஈர்க்கின்றனர்.
போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டதால், அதே பரிசுத்தொகை இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப்போவது பெங்களூருவா? குஜராத்தா? என்ற கேள்விக்கு இன்றிரவு விடை கிடைக்க உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA