Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிப் பகுதியில் இதமான காலநிலை நிலவி வருவதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் திற்பரப்பு அருவியை நோக்கி வந்தனர்.
குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்ததுடன், அருகில் உள்ள நீச்சல் குளங்களிலும் குழந்தைகளுடன் நீராடி மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால், பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறை காரணமாக அடுத்த சில நாட்களிலும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P