Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவமும், தூத்துக்குடியில் கஞ்சா மற்றும் மதுபோதையில் பெட்ரோல் பங்க் சேதப்படுத்தப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
தறிகெட்ட போதைப் பழக்கத்தால் தமிழகம் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் மாநில மக்களிடையே உருவாகி இருப்பதாக கூறினார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தத் தவறியதால் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சமூகக் குற்றவாளிகளாக மாறியதாகவும், அதே நிலை தற்போதைய ஆட்சியிலும் தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார்.
புதிய அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தினந்தோறும் கொலைகள் மற்றும் கொடூர குற்றங்கள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார்.
அதிகாரிகள் மாற்றம் செய்வதைத் தவிர, சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வெற்று அறிக்கைகள் வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P