2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை - போஸ்டர்களால் பரபரப்பு
மதுரை, 31 மே (ஹி.ச.) மதுரையில் பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில்,
Annamalai Posters


மதுரை, 31 மே (ஹி.ச.)

மதுரையில் பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், எதிரிகளையும், துரோகிகளையும் வென்றெடுக்க 2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை, தொண்டர்களின் கௌரவத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, 2.0 அவதாரம் என்ற வாசகம் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளாரா அல்லது புதிய அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளாரா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

மேலும், போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் நகர்வுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வரும் நிலையில், அவை பாஜக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் பின்னணி குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வரும் நிலையில், அண்ணாமலை தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

இதனால், 2.0 அவதாரம் என்ற வாசகத்தின் அரசியல் அர்த்தம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN