வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
மதுரை, 31 மே (ஹி.ச.) மதுரையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மாநில அரசுத் துறைகளின் தற்போதைய நிதி நிலை குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அனைத்து துறைகளிலும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள
CTR Nirmal Kumar


மதுரை, 31 மே (ஹி.ச.)

மதுரையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மாநில அரசுத் துறைகளின் தற்போதைய நிதி நிலை குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அனைத்து துறைகளிலும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல்கள், கடன் சுமைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர், அப்பகுதியில் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீர் குறைவதற்கும் குடிநீர் பற்றாக்குறை அதிகரிப்பதற்கும் குவாரிகள் முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் நீண்டகால குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கு முன்பு பொதுமக்களின் குறைகளை கேட்கக்கூட உரிய நிர்வாக அமைப்பு இல்லாத நிலை இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.

வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார்,

புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தாம் அமைச்சராக பொறுப்பேற்று 12 நாட்களே ஆகியுள்ளதாகவும், மற்ற அமைச்சர்கள் தங்களது துறைகளை பொறுப்பேற்று ஒரு வார காலம்தான் ஆகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அமைச்சரும் தங்களது துறைகளின் தற்போதைய நிலை, நிதி நிலைமை, கடன் சுமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக பல்வேறு துறைகள் நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஒரு காலத்தில் லாபத்தில் செயல்பட்டு வந்த போக்குவரத்துத் துறை தற்போது மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் கூறினார். அதேபோல், மின்சாரத் துறையில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் பெரும்பாலான துறைகளும் மிகவும் மோசமான நிதி நிலையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அனைத்து துறைகள் குறித்த ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, அந்தந்த துறைகளின் உண்மை நிலை மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், அதன் பின்னர் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN