Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 மே (ஹி.ச.)
திருவள்ளுவரை காவி நிறத்துடன் சித்தரிக்கும் நடவடிக்கைகள் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில், தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள ராஜேந்திர அர்லேகரும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி அவரை குறிப்பிட்ட சித்தாந்தத்திற்குள் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடும் தமிழர்களும் மத, இன மற்றும் மொழி திணிப்புகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றும், இதற்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கேரளாவில் ஆளுநராக உள்ள ராஜேந்திர அர்லேகர், அரசு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் 'பாரத மாதா' படத்தை தொடர்ந்து முன்னிறுத்தி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அமைச்சர்கள் சிலர் ஆளுநர் நிகழ்ச்சிகளை புறக்கணித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருப்பதும், திருவள்ளுவருக்கு காவி நிற அடையாளம் வழங்கப்படுவதும் தமிழர் விரோத செயல்கள் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கும் எதிரானவை என்றும் வன்னி அரசு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகள் உட்பட, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆளுநர் தனது அரசியல் மற்றும் சித்தாந்த சார்ந்த செயல்பாடுகளை கைவிட்டு, அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ