Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 31 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் விலை எதிர்பாராத அளவுக்கு சரிந்துள்ளதால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே சந்தையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காமல், உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
எடப்பாடி உழவர் சந்தை மற்றும் மொத்த காய்கறி சந்தைகளில், தரமான வெண்டைக்காய் ஒரு கிலோ வெறும் 5 ரூபாய் என்ற அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கமாக 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாக வேண்டிய வெண்டைக்காய், தற்போது பத்து ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பறிப்புக் கூலி, போக்குவரத்து செலவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகளைக் கணக்கிட்டால், ஒரு கிலோவுக்கு குறைந்தது 15 ரூபாய் கிடைத்தால் மட்டுமே நட்டமின்றி தப்பிக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விலை சரிவின் காரணமாக பல விவசாயிகள் தாங்கள் பறித்த வெண்டைக்காய்களை சந்தைக்கு கொண்டு செல்லாமல், வயல்களிலேயே கொட்டிவிட்டுச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், சந்தைக்கு கொண்டுவரப்பட்ட வெண்டைக்காய்களும் விற்பனையாகாமல் தேங்கியதால், வியாபாரிகள் சிலரும் அவற்றை சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், உழைத்து விளைவித்த பயிர் கண்முன்னே வீணாவதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தொடர் மழை காரணமாக உற்பத்தி அதிகரித்ததும், வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகமானதும், ஏற்றுமதிக்கான வாய்ப்பு குறைந்ததும் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்த நிலை நீடித்தால் வெண்டைக்காய் சாகுபடியை முற்றிலும் கைவிட வேண்டிய சூழல் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசு உடனடியாக தலையிட்டு வெண்டைக்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அரசே நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளை காக்க வேண்டும் என்றும் எடப்பாடி பகுதி விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b