காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம், 31 மே (ஹி.ச.) தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மக்கள் நலனுக்காக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழ
Ramadoss Vijay


விழுப்புரம், 31 மே (ஹி.ச.)

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மக்கள் நலனுக்காக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டில் குறிப்பாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் அரசுத் துறைகள், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம், மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெறுகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் முன்பு ஒய்வு பெற்றவர்கள் மூலம் காலியாக உள்ள நிலையில், தற்போதைய ஓய்வுகள் காரணமாக மேலும் பல பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் சேவை வழங்கும் திறன் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்கள் பெற வேண்டிய அத்தியாவசிய சேவைகளும் தாமதமடையும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் பல்வேறு துறைகளில் சுமார் 6,000 முதல் 8,000 பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் மட்டும் பல்வேறு அரசுத் துறைகளுக்காக 45 பதவிகளின் கீழ் 461 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உருவாகும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சேர்ப்புகள் போதுமானதாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

காலிப்பணியிடங்களால் ஏற்படும் பாதிப்புகள் :

* ஒரே அலுவலர் இரண்டு அல்லது மூன்று பொறுப்புகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

* கோப்புகள் பரிசீலனை, நலத்திட்ட அனுமதி, சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.

* பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று அனுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

* ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு மனஅழுத்தம் அதிகரிக்கிறது.

* துறைகளின் செயல்திறன் குறைகிறது.

அரசின் பொது துறை நிறுவனங்களான மின்வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்களில் தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டுகளிலேயே மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய தேவை இருந்ததாக பல்வேறு ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும் கோரிக்கைகள் :

2026 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் பணியாளர்களின் துறைவாரியான முழுமையான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

ஓய்வு பெறுவதால் உருவாகும் காலிப்பணியிடங்களை முன்கூட்டியே கணக்கிட்டு ஆட்சேர்ப்பு கால அட்டவணையை வெளியிட வேண்டும்.

துறைசார் பதவி உயர்வுகள் மூப்பின் அடிப்படையில் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

காலியாகும் கீழ்நிலைப் பணியிடங்களை TNPSC, TRB மற்றும் துறைசார் தேர்வுகள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்தப் பணியாளர்கள் சார்ந்த தற்காலிக நிர்வாக முறையை குறைத்து நிரந்தர நியமனங்களை அதிகரிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக காலிப்பணியிட விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

மக்கள் சேவையை பாதிக்காத வகையில் ஒவ்வொரு துறைக்கும் மனிதவளத் தேவையை ஆண்டு தோறும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடியாக தொடர்புடையதாகும். ஓய்வு பெறும் பணியாளர்களால் உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் விடுவது நிர்வாக செயல்திறனை பாதிப்பதோடு, பொதுமக்களின் உரிமையான சேவைகளையும் தாமதப்படுத்தும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை கணக்கெடுத்து, பதவி உயர்வுகளை விரைவுபடுத்தி, புதிய ஆட்சேர்ப்புகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு, மக்கள் சேவையை இடையூறு இன்றிச் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN