பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு
புதுடெல்லி, 31 மே (ஹி.ச.) பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையிலும், அதன் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலு
பெட்ரோல்


புதுடெல்லி, 31 மே (ஹி.ச.)

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேற்காசிய போர் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையிலும், அதன் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மத்திய அரசு ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை மத்திய அரசு திருத்தம் செய்கிறது.

அந்த வகையில், பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 1.5 ஆகவும், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 13.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 9.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையானது ஜூன் 01- ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் இல்லை.

எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியில் மாற்றம் செய்யப்படுவதால் உள்நாட்டில் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இதனிடையே, ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப வீட்டு உபயோகக் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், மேற்காசியாவில் போர் சூழல் தணியாததால் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறையுமா? அதிகரிக்குமா? என்பது நாளை (ஜூன் 01) காலை தெரிய வரும்.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இதனால் ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P