Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பேருந்து நிலையம், கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் கடைவீதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி
30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.
எனினும், புகார் கொடுத்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை திருவண்ணாமலை கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 17 வயது சிறுவனை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவன் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அச்சிறுவனை உடனடியாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் அவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருடப்பட்ட செல்போன்களை வெளியூர்களில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து புகார்கள் வந்தும் நடவடிக்கை தாமதமானதால் பொதுமக்களே களமிறங்கி குற்றவாளியைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் கூட்டாளிகள் குறித்தும், திருடப்பட்ட செல்போன்கள் எங்கு விற்கப்பட்டன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் என்பதால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b