Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 31 மே (ஹி.ச.)
சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு சோழபுரம் கண்மாயில் வேறுபட்ட கல் ஒன்று இருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா,செயலர் இரா.நரசிம்மன் அவ்விடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதி உள்கடையில் குமிழித் தூண் அருகில் இக்கல்வெட்டு காணப்படுகிறது, இது மூன்று அடி உயரமும், 1.1/4 அடி அகலம் உடையதாக உள்ளது.
கல்வெட்டின் மேற்பகுதியில் சிறிய அளவில் ஒற்றைக் காலை தூக்கியபடி புலி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டின் நிறைவுப் பகுதியில் வில் அம்பு மற்றும் மங்கலச் சின்னமாக இரண்டு குத்து விளக்குகளும் காட்டப் பெற்றுள்ளன.
எட்டி எனும் வணிகர்களுக்கான பட்டத்தை உடைய எரியன் என்பவன் செயங்கொண்ட சோழபுரம் என்னும் இவ்வூரில் புலியைக் கொன்று தம்மை காத்த வீரனுக்கு ஆசிரியம் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
மேலும் வணிகச் சாத்துகளுடன் வந்த வீரன் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு புலியோடு சண்டையிட்டு புலியைக் கொன்றதோடு தாமும் உயிர் நீத்தும் இருக்கலாம் அவனது வழியினரை பாதுகாக்கவும் இக்கண்மாயினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம், என்றும் எண்ண முடிகிறது, இன்றும் இக்கண்மாய் எட்டி என்ற பெயரோடு எட்டிச் சேரிக் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஆசிரியம் என்பது பாதுகாப்பை குறிக்கும். அடைக்கலம் அளித்தல்,மருத்துவ உதவி செய்தல், உணவு அளித்தல், போன்றவைகளையும் உள்ளடக்கியதாகும்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P