Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச)
அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b