Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 மே (ஹி.ச.)
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலத்தை முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய பக்தர்களால் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தில் சிக்கிய குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கதறி அழுத காட்சிகள் பயணிகளை வேதனைக்குள்ளாக்கின.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் தரிசனத்திற்காக வந்திருந்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க பெருமளவில் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பௌர்ணமி நாட்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசார் கயிறுகள் கட்டி பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டபோதும், ரயிலில் ஏற முடியாமல் பலர் தவித்தனர்.
எனவே, பௌர்ணமி நாட்களில் திருப்பதி மார்க்கத்தில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், காலை நேரங்களில் ஒரு மணி நேர இடைவெளியில் கூடுதல் சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam