Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் மூட உத்தரவிடப்பட்ட 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இதுவரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மீதமுள்ள 281 கடைகளை அரசு எப்போது மூடும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை 15 நாட்களுக்குள் மூடுவதாக அரசு அறிவித்த நிலையில், அந்த காலக்கெடு முடிந்த பிறகும் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் குறைந்த வருவாய் ஈட்டும் கடைகள் மற்றும் அருகில் மாற்றுக் கடைகள் உள்ள இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட கடைகளில் 60.81 சதவீதம் மட்டுமே மூடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்கள் முன்னெடுத்து வரும் மதுவிலக்கு போராட்டங்களுக்கு முக்கிய காரணம் குடும்ப நலன் மற்றும் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது என்ற அச்சம் என்றும் கூறியுள்ள அவர், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தி, படிப்படியாக அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மது விற்பனை வருவாயை மட்டுமே நம்பாமல், மாற்று வருவாய் வழிகளை ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்றும், மூடப்பட வேண்டிய மீதமுள்ள 281 மதுபானக் கடைகள் குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ