Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 31 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு மினி பேருந்து உடல் அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட சேஸ் வாகனம், செங்குறிச்சி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது.
பின்னர் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரை தாண்டி எதிர்திசை சாலைக்குள் புகுந்து, அங்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் சேஸ் வாகனத்தை ஓட்டி வந்த சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாரிமுத்து (37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தால் ஏற்பட்ட பரபரப்பில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் பின்புறத்தில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த பொலிரோ வாகனம் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பொலிரோ வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் (21) உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு விபத்துகளால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடர் விபத்துகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN