Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 மே (ஹி.ச.)
மதுரை மாநகரின் பழம்பெரும் வைணவத் தலங்களில் ஒன்றான அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயிலில், வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி பிரம்மோற்சவ விழா, தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
இன்று அதிகாலை முதலே திரளாகக் கூடிய பக்தர்கள், “கோவிந்தா, கோபாலா” என பக்தி கோஷங்கள் முழங்க தேரின் வடத்தை பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நான்கு மாட வீதிகளிலும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேர், மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் மெதுவாக நகர்ந்தது. சாலையின் இருபுறமும் கூடியிருந்த பெண்கள் தேருக்கு கற்பூர ஆரத்தி காட்டியும், திருநீறு மற்றும் குங்குமம் வழங்கியும் வழிபட்டனர். பக்தர்களின் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்த காட்சி, மதுரை மாநகரையே விழாக்கோலமாக்கியது.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல்துறையினர் செய்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க தேர் செல்லும் வழிநெடுகிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த வைகாசி பெருவிழா, நாளை ( திங்கட்கிழமை) தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள், கூடலழகர் பெருமாளை தரிசித்தால் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b