Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 31 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணை எனப்படும் கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 52 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வினாடிக்கு 527 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கும் நீர் முழுவதுமாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அணையில் இருந்து கணிசமான அளவு நீர் வெளியேற்றப்படுவதாலும், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்பவர்கள், கால்நடைகளை மேய்ப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், யாரும் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றங்கரையோரம் செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b