Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 31 மே (ஹி.ச.)
மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அரசியல் மோதல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜியும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் பாஜக அரசு மீது திரிணமுல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
நேற்றைய தினம், மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் பானர்ஜி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனாப்பூர் பகுதியில் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த சிலர், அவரை நோக்கி அழுகிய முட்டைகள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இன்று (மே 31), ஹூக்ளி மாவட்டத்தின் சண்டிதாலா காவல் நிலையம் அருகே திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிய நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P