Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 31 மே (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
ஏகாளிஅம்மன் திருக்கோயில் மற்றும் சின்ன கருப்பர் திருக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இந்த ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் மற்றும் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
வாடிவாசல் திறக்கப்பட்டதும் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் உற்சாகத்துடன் களமிறங்கினர். கிராம மக்கள், வெளியூர் பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன.
மாடுபிடி வீரர்கள் 300 பேர் களத்தில் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக மாடு அடக்கும் வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார், மருத்துவ குழுவினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை வரை நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b