Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
நடிகர் உதயா தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
வணக்கம்,
நான் நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்.
மக்கள் தீர்ப்பில் மிகுந்த எழுச்சியை காண முடிகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
கட்டாயம் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுப் போட்டு இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
மக்கள் சக்தியை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது.
முழு முடிவுகள் இன்னும் வர வேண்டி இருந்தாலும், விஜய் அண்ணாவுக்கு இப்போதே வாழ்த்து சொல்வது என்னுடைய கடமை. ஒரு மனிதர் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ அவமானங்கள், எவ்வளவோ எதிர்ப்பு என அத்தனையையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நடிகராக ஒரு மிகப்பெரிய இடத்தை தியாகம் செய்து பொது சேவைக்கு வந்து இன்று மக்களின் மனங்களை வென்றுள்ளார்.
எத்தனையோ கேலிகள், எத்தனையோ கிண்டல்கள், எத்தனையோ அவதூறு பிரசாரங்கள் என அத்தனையையும் வெற்றிகரமாக சமாளித்து இன்று அவர் வென்றிருப்பது மிகவும் பெரிய விஷயம்.
அரசியலுக்கு வர மாட்டார் என்று சொன்னார்கள், வந்தார். வந்தால் துணிச்சலாக நிற்க மாட்டார் என்று சொன்னார்கள், நின்றார். நின்றாலும் ஜெயிக்க மாட்டார் என்று சொன்னார்கள், இன்று வென்று காட்டி இருக்கிறார்.
இது அவருடைய நல்ல எண்ணத்துக்கும், நல்ல மனதுக்கும், மக்கள் அவர் மேல வைத்திருக்கும் அன்புக்கும் கிடைத்திருக்கும் சான்றிதழ். ஒவ்வொரு தொகுதியிலுமே விஜய் அண்ணா தான் நிற்கிறார் என்று நினைத்து இன்றைக்கு இந்த வெற்றியை மக்களுக்கு தந்துள்ளனர்.
ஒரு நடிகராக உச்சத்தில் இருந்தவர், மக்கள் சேவை செய்ய அரசியலுக்கு வந்தபோது பலர் அவரைப் பலவாறு கேலி செய்தார்கள். சினிமாக்காரன் என்று சொல்லி சினிமாக்காரர்கள் பலரே அவரை ஏளனம் செய்தார்கள், ஆதரவு தராமல் மௌனமாக இருந்தார்கள். ஆனால் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மக்கள் ஆதரவு இருந்தால் எந்த துறையை சேர்ந்தவர் வேண்டுமானாலும் அரசியலில் சாதிக்கலாம் என்று தனது தன்னம்பிக்கையாலும், நல்ல எண்ணத்தாலும் அவர் முறியடித்துள்ளார்.
அண்ணன் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.
அவர் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நான் த.வெ.க-விற்குத் தான் ஆதரவு அளித்து வருகிறேன். அண்ணன் விஜய்க்கு எப்பொழுதும் ஒரு தம்பியாகவும், தொண்டனாகவும் எனது ஆதரவு இருக்கும்.
இந்த வெற்றி எந்தவிதப் பாகுபாடும், ஈகோவும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தந்த வெற்றியாகும். த.வெ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த வெற்றிக்குப் பிறகு சினிமாத் துறை மட்டுமல்லாது மற்ற அனைத்துத் துறைகளும் இன்னும் சிறப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
விஜய் அண்ணாவிற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
என்றும் உங்கள்,
நடிகர் உதயா
Hindusthan Samachar / Durai.J