Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 04 மே (ஹி.ச.)
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநில சட்டசபை தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெற்றுள்ள வெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு சான்றாகும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்சித் பாரத் என்ற வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்கு இந்த தேர்தல் முடிவுகள் மேலும் வலுசேர்த்துள்ளன.
சப் கா விஸ்வாஸ்’ என்ற கொள்கையுடன் செயல்படும் என்டிஏ கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான என்டிஏவின் உறுதிப்பாட்டின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்த தேர்தல் முடிவுகளில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மை, வளர்ச்சி மற்றும் மக்களுடன் நேர்மையான உறவு ஆகியவற்றுக்கே இளம் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இந்த முடிவுகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உணர்த்தியுள்ளன என்றார்.
மேலும் இந்த வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில் முன்னாள் எம்.பி. விஜயசாயிரெட்டி தனது ‘எக்ஸ்’ பதிவில்,
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைவது நாட்டின் நலனுக்கு நல்லது.
பங்களாதேஷ் எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான டி.வி.கே. கட்சியின் அரசியல் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தென்னிந்தியாவில் நம்பகமான பிராந்திய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA