Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 04 மே (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
234 தொகுதிகளில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் சுமார் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இது இதுவரை இல்லாத வாக்குப்பதிவு சதவீதம் ஆகும். தமிழகத்தில் மொத்தமுள்ள 5.67 கோடி வாக்காளர்களில் சுமார் 4.87 கோடி பேர் ஜனநாயக கடமையாற்றினர்.
இந்த நிலையில், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் இன்று (மே 4) காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அது தொடங்கியது முதலே பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
5 ஆம் சுற்று நிலவரப்படி 21 ஆயிரத்து 202 வாக்குகளைப் பெற்று அவர் முன்னிலை வகித்து வருகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக 15 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிவன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் உள்ளார். 7 ஆயிரத்து 763 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2001 க்குப் பிறகு 3 முறை பாமக வெற்றி பெற்றுள்ளது.
2021 தேர்தலில் பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 630 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி 78 ஆயிரம் 770 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.
இதேபோல், 2006 இல் பாமக வேட்பாளர் இல.வேலுசாமியும், 2001 இல் பாமக வேட்பாளர் கி.பாரிமோகனும் வெற்றி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, 2026 தேர்தலிலும் பாமக வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. 85 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சிவன் 67 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
Hindusthan Samachar / ANANDHAN