Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், வட சென்னையின் நுழைவாயிலான ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயதாமு வெற்றி பெற்றார். அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் டெபாசிட் இழந்துள்ளார்.
தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் திமுக சார்பில் டாக்டர் சுபைர் கான் களமிறங்கினார். அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார் களம் கண்டார். தவெக சார்பில் விஜயதாமு போட்டியிட்டார். புதிய முகமாக களமிறங்கியுள்ள போதிலும் திமுக வேட்பாளர் டாக்டர் சுபைர் கானுக்கு அதிக ஆதரவு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
அதே சமயத்தில், அதிமுக வேட்பாளர் டி. ஜெயக்குமார் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற முறையில் அவர் ராயபுரம் தொகுதியை கைப்பற்ற சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தவெக, தேர்தல் களத்தையே மாற்றியது.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலாகவே, ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயதாமு முன்னிலையில் இருந்து வந்தார். தற்போதைய 14வது சுற்று முடிவின்படி தவெக வேட்பாளர் விஜயதாமு 58,299 வாக்குகளை பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் சுபைர் கான் 44,315 வாக்குகளையும் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 17,952 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார்.
சென்னை மாநகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றாக ராயபுரம் விளங்குகிறது. முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில்தான் என்கிற போது அப்பகுதியின் அரசியல் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும்.
1977 முதல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால், ராயபுரம் தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளது. அதன்படி, நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டையாக ராயபுரம் விளங்கி வருகிறது.
ராயபுரம் தொகுதியில் மொத்தமுள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 931 வாக்காளர்களில் 79.34 சதவீதத்தினர் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN