Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம்,04 மே (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் தொகுதிக்கான வாக்குகள் முதல் தளத்தில் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த தொகுதிக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கீழ்வேளூர் தொகுதிக்காக 16 மேஜைகள் அமைக்கப்பட்டு, 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வேதாரண்யம் தொகுதிக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தேர்தல் ஆணைய விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு, நடிகர் விஜயின் முகம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து தமிழகம் வெற்றிக் கழகத்தை சேர்ந்த முகவர் ஒருவர் வந்தார்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டிய போலீசார், அவரை உடனடியாக வெளியேற்றினர்.
மேலும், அரசியல் கட்சி அல்லது தலைவர்களின் படம் இடம்பெற்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்றும், உடையை மாற்றிவிட்டு வருமாறும் போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA