த.வெ.க முன்னிலை எதிரொலி - நீலாங்கரையில் விஜய் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழலில், நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும்
Th


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழலில், நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், விஜயின் இல்லம் அமைந்துள்ள கேசரினா டிரைவ் அவென்யூ பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் திரளும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி ஆணையர் ராமர் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் கூடுதல் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

விஜய் இல்லம் சுற்றியுள்ள சாலைகளில் பேரிக்காடுகள் (Barricades) அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு வரும் நபர்கள் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டு, தேவையற்ற கூட்டம் கூடாத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ