தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னை, 04 மே (ஹி.ச.) கடந்த மார்ச் 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 2
Vote Counting Today


சென்னை, 04 மே (ஹி.ச.)

கடந்த மார்ச் 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 85.10 சதவீதம், மேற்கு வங்கத்தில் 92.47 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம், கேரளத்தில் 78.27 சதவீதம், அசாமில் 85.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்கத்தில் முறைகேடு புகார் எழுந்ததால் மகரஹட் பஸ்சிம், டைமண்ட் ஹார்பர் ஆகிய 2 தொகுதிகளின் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் கடந்த 2-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பால்டா தொகுதியில் மே 21-ல் மறு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கிடையே, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தரவைக்கும் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவும் நிலையில் அரியணையை அடைய மும்முரம் காட்டி வருகிறது. முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியவர்கள் களத்தில் உள்ளனர்.

2021இல் முதல்முறையாக முதல்வரான திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறார். கடந்த முறை 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக இம்முறை 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது.

அதே போல் 2021இல் ஆட்சியை இழந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க, பா.ம.க, அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 1,099 வாக்குச்சாவடிகளில் ஏப்.9-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 294 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 9.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.

மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியவரும்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஓட்டுகள் அடுத்தடுத்து எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தின் ஒரு பகுதியாக தபால் வாக்குகள், மற்றொரு பகுதியில் ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும்.

ஒரு மையத்தில் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் 16 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரி, லயோலா, அண்ணா பல்கலைக்கழகம் வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b