Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மே (ஹி.ச.)
உலகப் பேரறிவாளரும், பொதுவுடமை தத்துவப் பேராசானுமான கார்ல் மார்க்ஸின் 208-வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் கன்னிமரா பொது நூலக வளாகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் புரட்சி அதிமுக தலைவா் பெங்களூரு புகழேந்தியும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் புரட்சி அதிமுக தலைவா் பெங்களூரு புகழேந்தி பேசும் போது,
இந்த முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடையே தான் போட்டி என்று கூறியிருந்தேன்.
அதே பாேல் தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன. ஆனால் அதிமுக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவான தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் அதிமுக தேய்ந்து விட்டது தெரிகிறது. அதிமுகவின் கதையை 90 சதவீதம் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டார்.
எனவே அதிமுகவில் வெற்றி பெற்றவர்கள் பழனிசாமியை நம்பி பாதாளத்திற்கு சென்றுவிடாதீர்கள்.
டெல்லியில் இருப்பவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் வந்து ஆட்சியை அமைத்துவிடலாம் என்று நினைத்தார்கள்.
பாஜகவின் அடிமை தான் எடப்பாடி பழனிசாமி. எனவே அதிமுக சார்பில் வெற்றிப் பெற்றவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றது.
இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜய்யின் தவெக கட்சி, திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.
ஆட்சி அமைக்க தவெகவிற்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN