Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 118 தொகுதிகளில் வெற்றி கட்சி, ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களை வென்றிருக்கிறது.
எனவே ஆட்சி அமைக்க தேவையான 10 பேரை எங்கிருந்து கொண்டுவருவது என விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இன்று
(05-05-26) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெ.சண்முகம் கூறுகையில்,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டோம்.
அதிமுக - பா.ஜ.க கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கூட்டணி செயல்பட்டது. எங்களுடைய நோக்கத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
பா.ஜ.க அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 27 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது என்ற முறையில் பா.ஜ.கவை தமிழ்நாடு மக்கள் முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள்.
அறுதி பெரும்பான்மை கிடைக்காத ஒரு நிலைமை என்பது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக ஒரு தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிற கட்சி என்கிற முறையில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை இன்னும் வெளிப்படையாக இன்னும் சொல்லவே இல்லை.
வெளிப்படையாக முதலில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டியது அந்த கட்சி தான். அவர்கள் எதுவும் தெரிவிக்காத நிலையில் எங்கள் தரப்பிடம் என்ன கருத்து? என்ன நிலைப்பாடு என்று கேட்பது பொருத்தமானதாக இல்லை.
இதுவரைக்கும் எங்களுக்கு அந்த கட்சியிடம் இருந்து அழைப்பு வரவில்லை.
அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படையாக சொன்னதற்கு பிறகு என்ன நிலைப்பாடு எடுப்பது என்று நாங்கள் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b