Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக திகழ்கிறது.
இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு உள்ளார்.
இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் முதல் முறையாக நடைபெற இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி - விஜய் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ-க்கள், மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் பட்டினம்பாக்கம் அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க-வில் உள்ள ஒரு பிரிவினர் விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது இந்த எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b