'தாங்கொணா துயர்' - தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
சென்னை, 06 மே (ஹி.ச.) பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உதய்பூர் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்த செய்தி திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர்
Actor Kamal Haasan Expresses Condolences


சென்னை, 06 மே (ஹி.ச.)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உதய்பூர் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

இந்த செய்தி திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் 90-கள் முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ஆர்.பி. சவுத்ரி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் ஆரம்ப காலப் படங்களுக்கு முதுகெலும்பாக இருந்தவர்.

இயக்குநர்கள் கே.எஸ். ரவிகுமார், விக்ரமன், சேரன் உள்ளிட்ட பலரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி போன்ற தலைமுறை கடந்த வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.

ஆர்.பி. சவுத்ரியின் மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “இது தாங்கிக்கொள்ள முடியாத துயரம்” என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது.

சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்.

அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனப் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b