Enter your Email Address to subscribe to our newsletters

அனகாப்பள்ளி , 06 மே (ஹி.ச.)
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் அரசியல் தலைவர்களுக்கு இரட்டை அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஆந்திரப் பிரதேச உள்துறை மந்திரி வங்கலபூடி அனிதா உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எந்த வித சலுகையும் இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
அனகாப்பள்ளி மாவட்டத்தில் ‘பாதுகாப்பான சாலைகள்.. பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற கோஷத்துடன் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அட்டரோடு முதல் நக்கப்பள்ளி வரை நடைபெற்ற இந்த பேரணியில் உள்துறை மந்திரி அனிதா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பைக் வாங்கும் மக்கள், உயிரைக் காப்பாற்றும் ஹெல்மெட்டை வாங்குவதில் அலட்சியம் காட்டக்கூடாது.
சமீப காலமாக நடைபெறும் பல சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
உயிரின் மதிப்பை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அரசியல் தலைவர்கள் உட்பட யாராக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் அரசியல் தலைவர்களுக்கு இரட்டை அபராதம் விதிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படாது.
எனது பாயகராவுபேட்டை தொகுதியில் ஒரே மாதத்தில் பல சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன.
இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரை விட முக்கியமானது எதுவும் இல்லை.
அனைவரும் ‘ஹெல்மெட் அணிவோம்.. பாதுகாப்பாக பயணிப்போம்’ என்ற விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேரணியில் பங்கேற்ற வாகன ஓட்டிகளுக்கு மந்திரி அனிதா நேரடியாக ஹெல்மெட்டுகள் வழங்கினார்.
பாதுகாப்பான பயணத்திற்காக போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA