தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்ய நாளை தி.மு.க எம்.எல்.ஏ -க்கள் கூட்டம்
சென்னை, 06 மே (ஹி.ச.) தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. தவெ
திமுக சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்ய நாளை  திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்


சென்னை, 06 மே (ஹி.ச.)

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் கூட்டம் நாளை

(மே 07) நடைபெற உள்ளது.

கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் திமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் நிலையில், சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார்.

இதனால் நாளைய கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்வது மரபு. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டப்பேரவையில் அரசின் கொள்கைகளை விமர்சிப்பது, முக்கிய விவாதங்களில் பங்கேற்பது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருங்கிணைப்பது ஆகிய பொறுப்புகளை இவர் வகிப்பார்.

நாளைய கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b