Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 மே (ஹி.ச.)
தமிழக அரசியலில்
அதிகாரம் அல்லது
அதிகார பதவி என்பது ஒரு சுழலும் சக்கரம் என்பதை தற்போதைய நிகழ்வுகள் மிகத் தெளிவாகப் புரிய வைத்துள்ளது.
மே 4-ம் தேதி வரை முதலமைச்சராகவும்,
பெரும் அதிகார பலத்துடனும் வலம் வந்த மு.க.ஸ்டாலின், இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்த்துகிறது.
அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயரிய பாதுகாப்புகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, அவரது 12 ஆம் வகுப்பு பேரன் இன்பநிதி இரண்டே கால் கோடி செலவில் வாங்கி கொடுத்த டிபன்டர் கார் பின்னால் அணிவகுத்து வந்த பாதுகாப்பு வாகனங்கள் மறைந்து, இன்று சாதாரண ஒரு குடிமகனாக அவர் காட்சியளிப்பது காலம் செய்த கோலம் என்றே சொல்ல கூறலாம்.
அதிகாரத்தில் இருக்கும்போது ஒருவரை சுற்றி இருக்கும் கூட்டம், அந்த அதிகாரம் பறி போனவுடன் அப்படியே விலகி செல்வது அரசியலின் கசப்பான உண்மை.
இன்னொரு பக்கம்,
ஒரு மாதத்திற்கு முன்பு வரை
நடிகர் விஜய் அல்லது த.வெ.க என்ற குழந்தை கட்சிக்கு தலைவர் என்ற முறையில் தேவையான பாதுகாப்பை வழங்க மறுத்த அதே காவல்துறை, இன்று அவருக்கு ராஜமரியாதை வழங்கி வருவது அதிகார மையத்தின் இடமாற்றத்தை துல்லியமாக காட்டுகிறது.
சட்டமும், விதிகளும் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் ஒருவருடைய செல்வாக்கும், அவர் வகிக்கும் பதவியும் தான், காவல்துறையின் அணுகு முறையை தீர்மானிக்கிறது.
அன்று சாதாரண குடிமகனாகப் பார்க்கப்பட்ட ஒருவர், இன்று அதிகாரத்தின் உச்சத்தில் அல்லது அரசியல் முக்கியத்துவத்தில் உயர்ந்து நிற்கும் போது, அதே அதிகாரிகள் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது அதிகார வர்க்கத்தின் இயல்பை வெளிப்படுத்துகிறது.
பதவியும் அதிகாரமும் இருக்கும் போது ஒரு மனிதனை துதிபாடும் இந்த உலகம், அந்தப் பதவி போன அடுத்த கணமே அவரை திரும்பி பார்க்கக்கூட மறுக்கிறது.
இங்கு மனித நேயத்திற்கோ அல்லது ஒருவருடைய தனிப்பட்ட உழைப்பிற்கோ மதிப்பளிக்கப்படுவதை விட, அவர் கையில் இருக்கும் ‘பவர்’ அல்லது சக்தி என்ற அதிகாரத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்கள் அது அரசியல் பதவி ஆனாலும் சரி, அரசு அதிகாரிகள் என்ற பதவியானாலும் சரி, நீதித்துறை பதவி ஆனாலும் சரி, அதைத் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறார்கள்.
ஆனால்,உண்மையில் அந்த மரியாதை அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கே வழங்கப்படுகிறது என்பதை பலரும் உணர்வதில்லை.*
தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார்கள்.
ஆனால், தற்போதைய சூழலில் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை மாற்றமும், விஜய்க்கு வழங்கப்பட்டு வரும் அதீத முக்கியத்துவமும் அதிகார அரசியலின் உச்சக்கட்ட முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஒருவரின் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, அரசியல் லாப நஷ்டங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. ஆனால், நிஜத்தில் யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அவருக்கே முதல் மரியாதை” என்ற எழுதப்படாத விதிதான் இங்கு மேலோங்கி நிற்கிறது.
இங்கு மனிதர்களுக்கு மதிப்பில்லை, அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த பதவிக்கும் அதிகாரத்திற்கு மட்டுமே மதிப்பு.
இறுதியாக, காலம் ஒருபோதும் ஒரே நிலையில் இருப்பதில்லை என்பதை தலைவர்கள் உணர வேண்டியது அவசியம்.
இன்று அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் நாளை சாதாரண நிலைக்கு தள்ளப்படலாம்.
இன்று புறக்கணிக்கப்படுபவர்கள் நாளை அதிகாரத்தின் மையப்புள்ளியாக மாறலாம்.
ஆனால், இந்த அதிகார மாற்றங்களுக்கு மத்தியில் காவல் துறையும், நிர்வாகமும் நடுநிலையோடு செயல்பட தவறினால், அது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தளர்த்திவிடும்.
அதிகாரம் என்ற பவருக்கு தான் மதிப்பு என்ற நிலை மாறாதவரை,
உண்மையான தகுதியுள்ள மனிதர்களுக்கு இந்தச் சமூகத்தில் உரிய இடம் கிடைப்பது என்பது கேள்விக்குறி தான்.
Hindusthan Samachar / Durai.J