குன்னூர் மார்க்கெட்டில் 25 கிலோ ரசாயன மாம்பழங்கள் மற்றும் அழுகிய மீன்கள் பறிமுதல்
நீலகிரி, 06 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்ற
Mangoes


நீலகிரி, 06 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து பழக்கடைகளும் தீவிரமாக சோதிக்கப்பட்டன.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால், மாம்பழங்களை செயற்கை முறையில் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, சில கடைகளில் விதிமுறைகளை மீறி ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 கிலோவிற்கும் மேற்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மீண்டும் விற்பனைக்கு வராத வகையில் அவற்றின் மீது பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

மேலும், விதிமீறலில் ஈடுபட்ட நான்கு பழக்கடைகளுக்கு முதற்கட்டமாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மீன் கடைகளிலும் அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர்.

இந்த ஆய்வின் போது, ஒரு கடையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

உடனடியாக அங்கிருந்த சுமார் ஒரு கிலோ அளவிலான அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்த அந்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, முதற்கட்டமாக 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ரசாயனம் சேர்த்த பழங்களையோ அல்லது தரம் குறைந்த இறைச்சி மற்றும் மீன்களையோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN