8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
புதுடெல்லி , 06 மே (ஹ.ச.) 10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அக்சர்
C


புதுடெல்லி , 06 மே (ஹ.ச.)

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் சென்னை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் சமீர் ரிஸ்வி அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். திரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க தவறினர்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உதவியுடன் 87 ரன்கள் குவித்தார்.

உர்வில் பட்டேல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கார்த்திக் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் 41 ரன்கள் எடுத்தார்.

சாம்சன்-கார்த்திக் ஷர்மா ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதன் மூலம் சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் சார்பில் அக்சர் பட்டேல் மற்றும் லுங்கி நிகிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA