Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 06 மே (ஹி.ச.)
ராமநாதபுரம் நகரின் போக்குவரத்து நகர் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து பரபரப்பு நிலை ஏற்பட்டது. இதையடுத்து கேணிக்கரை காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு சென்ற போலீசார், குறிப்பிட்ட வீடு வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்ததையும், அதன் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதையும் கவனித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு கைப்பற்றி, மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (38) என்பதும், அவரது தந்தை பெயர் ஷியாம் சுந்தர்லால் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் எவ்வாறு அந்த வீட்டில் தங்கி இருந்தார், எப்போது இறந்தார் என்பதற்கான விவரங்களும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மரணம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா, தற்கொலையா அல்லது உடல்நலக் குறைபாட்டால் ஏற்பட்ட மரணமா என்பதையும் கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்தின் சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூட்டிய வீட்டுக்குள் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN