Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சத்திரப்பட்டியில் குடும்பத் தகராறு தொடர்பாக மாமனாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்தில் வனத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஜெகனின் மாமனார் முருகவேல், மருமகன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு திடீரென வன்முறையாக மாறியதில், ஆத்திரமடைந்த ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முருகவேலை கொலை வெறியுடன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முருகவேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அவர் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதிலும் முடிவு எட்டப்படாததால், இரு தரப்பினர்மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியதால், பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam