பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை - டெல்லி மருத்துவர்கள் சாதனை
புதுடெல்லி , 06 மே (ஹி.ச.) பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான மருத்துவ செயலாக கருதப்படும் நிலையில், அரிய வகை பிறவி இதயக்குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்த
A


புதுடெல்லி , 06 மே (ஹி.ச.)

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான மருத்துவ செயலாக கருதப்படும் நிலையில், அரிய வகை பிறவி இதயக்குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கவிருந்தது.

33 வயதான அந்த பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது கருவில் இருந்த குழந்தைக்கு அரிய வகை பிறவி இதயக்குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இந்த குறைபாடு காரணமாக நுரையீரலிலிருந்து வரும் ஆக்சிஜன் செறிந்த ரத்தம் சரியான முறையில் இதயத்துக்குச் செல்லாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

டெல்லி ஒக்லாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையின் இதயசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் கே.எஸ். அய்யர் தலைமையிலான மருத்துவக் குழு குழந்தை பிறந்த உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டால் காப்பாற்ற முடியும் என பெற்றோருக்கு விளக்கம் அளித்தது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்கு சம்மதித்து மருத்துவமனை அருகே தங்கி இருந்தனர்.

கர்ப்பகாலம் முழுவதும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

பின்னர் பிரசவ நாள் வந்தபோது பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த உடனேயே குழந்தைக்கு சுவாசக்குறைபாடு ஏற்பட்டது.

உடனடியாக செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதயக்குறைபாடு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குழந்தை பிறந்த மறுநாளே திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் போது ஆக்சிஜன் செறிந்த ரத்த ஓட்டம் இதயத்தின் இடது பக்கத்துக்கு செல்லும் வகையில் மருத்துவர்கள் மாற்றியமைத்தனர்.

இதன் மூலம் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்தது.

11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைத்திருந்த பின்னர் குழந்தை முழுமையாக நலம்பெற்றதால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற அரிய இதயக்குறைபாடு சுமார் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஏற்படும் என்றும், உடனடி அறுவை சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA