அறுந்து கிடந்த மின்சாரம் தாக்கி 4 எருமை மாடுகள் உயிரிழப்பு
திண்டுக்கல், 06 மே (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவ
Buffalo


திண்டுக்கல், 06 மே (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மருதன் (45). இவர் தனது வாழ்வாதாரத்திற்காக 25-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார்.

இன்று காலை ராமநாதநகர் பகுதியிலிருந்து சண்முக நதி செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கள்ளக்காடு பகுதி விவசாய நிலத்திற்குத் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

நேற்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, விவசாய நிலத்தின் வழியே சென்ற மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.

இதனை அறியாத மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 4 எருமை மாடுகள் மற்றும் அங்கிருந்த ஒரு எலி அலறியபடி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தன.

அதிர்ஷ்டவசமாக மற்ற மாடுகள் மற்றும் மாடுகளை ஓட்டிச் சென்ற விவசாயி மருதன் உயிர் தப்பினர்.

உயிரிழந்த 4 மாடுகளின் மதிப்பு சுமார் 2.5 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிவித்துள்ள விவசாயி மருதன், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மின் வாரியத்தின் பராமரிப்பு குறைபாடே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சாடியுள்ள அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN