Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 06 மே (ஹி.ச.)
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தை சுற்றி கூட்டணி கட்சிகளுக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியாக என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், முடிவுகள் வெளியாகியதில் என்.ஆர் காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் முதலமைச்சர் ரங்கசாமி தீவிரமாக ஈடுபட்டு, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேசமயம், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பாஜக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் நமச்சிவாயம் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ரங்கசாமியை சந்தித்து அமைச்சரவை பங்கீடு குறித்து பேச பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறாத நிலையில், மாலை ஆரோவில் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இரு தரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், கடந்த ஆட்சியைப் போல பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் பதவியும், சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ரங்கசாமி, ஒரு அமைச்சர் பதவியும் துணை சபாநாயகர் பதவியும் மட்டுமே வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தரப்பில் அதிருப்தி அதிகரித்துள்ளது.
மேலும், கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிகளும் அமைச்சரவைப் பதவி கோரி வலியுறுத்தி வருவதால், கூட்டணிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P