த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு
சென்னை, 06 மே (ஹி.ச) தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில்
தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு


சென்னை, 06 மே (ஹி.ச)

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக ஆலோசனை நடத்தி வருகிறது.

அதன்படி தவெக தலைமையில் பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில், பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, விஜய் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்தப் பரஸ்பர நல்லுறவின் தொடர்ச்சியாகவே தற்போதைய அழைப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைப்பது உறுதியானால், தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b