Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 06 மே (ஹி.ச.)
நெல்லை தொகுதியில் நீண்டகாலமாக போட்டியிட்டு வந்த பா.ஜனதா மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த முறை அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாத்தூர் தொகுதிக்கு மாற்றப்பட்டு களமிறக்கப்பட்டார்.
அவரை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நயினார் நாகேந்திரன் 5 ஆயிரத்து 989 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கடற்கரை ராஜிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அஜித் 53 ஆயிரத்து 498 வாக்குகள் பெற்றிருந்தார்.
அதேசமயம், சசிகலா ஆதரவு அணியான அ.இ.பு.த.மு.க. சார்பிலும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அவர்களை ஆதரித்து சசிகலா நேரடியாக பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும், சில இடங்களில் நடிகர் கார்த்திக்கும் பிரசாரம் செய்தார்.
சாத்தூர் தொகுதியில் சசிகலா அணியின் வேட்பாளராக போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிராஜா 11 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றார்.
இந்த வாக்குகள் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணிக்கு கிடைக்க வேண்டியவை என்றும், அவை பிரிந்ததாலேயே நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்ததாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் நீண்டகால ஆதிக்கம் கொண்டிருந்த நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை ஆய்வு செய்து சாத்தூருக்கு மாறியிருந்தாலும், சசிகலா அணியின் வாக்கு பிரிப்பு அவரது வெற்றி வாய்ப்பை பறித்ததாக கூறப்படுகிறது.
இது போலவே, முதுகுளத்தூர், உசிலம்பட்டி, தென்காசி ஆகிய தொகுதிகளிலும் சசிகலா ஆதரவு வேட்பாளர்கள் பிரித்த வாக்குகளால் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முது குளத்தூரில் அ.இ.பு.த.மு.க. வேட்பாளர் 40 ஆயிரத்து 422 வாக்குகளும், உசிலம்பட்டியில் 16 ஆயிரத்து 620 வாக்குகளும், தென்காசியில் 7 ஆயிரத்து 771 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த வாக்கு பிரிப்பே என்.டி.ஏ. கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA