தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் வெயிலின் கோரதாண்டவம் - நீரின்றி வறண்டு குளமாக மாறிய இராமநதி அணை
தென்காசி, 06 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, முக்கிய நீராதாரமான இராமநதி அணை முழுமையாக வறண்டு குளம் போன்று மாறியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக
ராம நதி அணை


தென்காசி, 06 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, முக்கிய நீராதாரமான இராமநதி அணை முழுமையாக வறண்டு குளம் போன்று மாறியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி இயற்கை வளமிக்க பகுதியாக விளங்கும் தென்காசி மாவட்டத்தில், குண்டாறு, அரிஹரநதி, அனுமன் நதி, சிற்றாறு, கல்லாறு, இராமநதி, கடனாநதி உள்ளிட்ட ஆறுகள் மூலம் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் கோவில், இராமநதி, கடனாநதி ஆகிய அணைகள் மூலம் ஆண்டுதோறும் பிசானம் மற்றும் கார்பருவம் என இரு போக சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடுமையான வெயிலின் தாக்கத்தால் கடையம் அருகே 84 அடி கொள்ளளவு கொண்ட இராமநதி அணை தற்போது முழுமையாக வறண்டு காணப்படுகிறது.

அணையின் பெரும்பாலான பகுதிகள் மண் மற்றும் மணலால் நிரம்பி கிடப்பதால் அதன் நீர்தேக்க திறன் கணிசமாக குறைந்துள்ளது.

தற்போது அணை பகுதி கால்நடைகள் மேயும் நிலமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 52.50 அடி நீர்மட்டம் இருந்த நிலையில், இந்த ஆண்டு போதிய மழை பெய்திருந்தாலும் வெயிலின் தீவிரத்தால் அணை வறண்டு போனது குறிப்பிடத்தக்கது.

இந்த அணையின் மூலம் வடகால், தென்கால், பாப்பன்கால், புதுக்கால் ஆகிய கால்வாய்கள் வழியாக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தெற்கு கடையம், மேலக் கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், பொட்டல்புதூர், துப்பாக்குடி உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 33 பாசன குளங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது.

அதேபோல், கடையம் வட்டாரத்தில் உள்ள 23 ஊராட்சிப் பகுதிகளின் குடிநீர் தேவைக்கான பிரதான ஆதாரமாகவும் இராமநதி அணை இருந்து வருகிறது.

இதற்கிடையில், இராமநதி அணையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அணை வறண்டுள்ளதால், இந்த திட்டம் நிறைவு பெற்ற பின்னரும் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

1974 அக்டோபர் 28ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்த இந்த அணை, தற்போது 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் பராமரிப்பு இல்லாமல் சுமார் 20 அடிக்கு மேல் மணல், மண் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, முழுமையாக வறண்டு காணப்படும் இராமநதி அணையை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, அதன் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam