Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 06 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட இடங்களில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனை குளிர்விக்கும் விதமாக தாரா பாத்திரத்தில் பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு தாராபிஷேகம் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட அஷ்டலிங்க கோவில்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது தாரா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் கடந்த நான்காம் தேதி தொடங்கியுள்ளதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள அண்ணாமலையாரின் திருமேனியை குளிர்விக்கும் விதமாகவும், அக்னி தோஷ நிவர்த்தியாக சிவலிங்கத்தின் மேல் பகுதியில் தாரா பாத்திரம் வைக்கப்பட்டு அதில் பன்னீர், புனிதநீர், வெட்டிவேர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் போடப்பட்டு பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் இருந்து புனித நீர் சிவலிங்கத்தின் மீது துளித்துளியாக விழும்படியும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும், கிரிவலப்பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவிலில் உள்ள லிங்கத்தின் மீதும் தாரா பாத்திரம் கட்டப்பட்டு தாராபிஷேகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி முதல் வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN