ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய்!
சென்னை, 06 மே (ஹி.ச.) தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆளுநரை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆல
விஜய்


சென்னை, 06 மே (ஹி.ச.)

தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆளுநரை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக்குப் பிறகு, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆளுநரை நேரில் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது.

விஜயுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோர் இணைந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுள்ளனர்.

கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜ் பவனுக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதுடன், பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசமும் கோரியுள்ளது.

118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தவெக, மீதமுள்ள எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர், விமான நிலையத்திலிருந்து நேரடியாக ராஜ் பவனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam