Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 மே (ஹி.ச.)
17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக முறையில் மக்களின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என அக்கட்சியினர் பேசி வந்தனர்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி திமுகவும் இதற்கு ஆதரவு தர உள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் பதிவு மூலம் தமிழக அரசியல் களத்தில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வர உள்ளதாக தெரிய வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P