Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மே (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நாளை (மே 10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
இதையொட்டி, ரசிகர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிஎஸ்கே உடன் இணைந்து சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நாளை (மே 10 ) நடைபெற உள்ள போட்டிக்கான ஸ்பான்சர் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) வைத்திருக்கும் ரசிகர்கள், சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
ரசிகர்கள் தங்களின் நுழைவுச்சீட்டில் உள்ள பிரத்தியேக க்யூ-ஆர் குறியீட்டை மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பயணத்தைத் தொடங்கலாம்.
இந்தச் சலுகையானது ஒருமுறை சென்று வருவதற்கான இரண்டு நுழைவு மற்றும் இரண்டு வெளியேறுதல்களை உள்ளடக்கியது.
மேலும், போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b