Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 09 மே (ஹி.ச.)
குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, திருச்சியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இன்று (மே 9) காலை 10 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. வழக்கமாக கோடை வெயிலையே மக்களால் சமாளிக்க முடியாது.அதுவும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கோரத்தாண்டவம் ஆடும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தநிலையில் அக்னி நட்சத்திர நாட்களில் மழை பெய்து வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருக்கிறது.
மழையின் காரணமாக திருச்சியில் பூமி குளிர்ந்து குளிர்ச்சி நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b