Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 01 மே (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பெருநகர் பகுதியை சேர்ந்தவர் கேதாராம்.
இவர் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி லீலா. இத்தம்பதியினர் தங்களது இரண்டு மகள்களுடன் காஞ்சிபுரம் செட்டித்தெரு பகுதியில் உறவினரின் குழந்தை பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் இறங்கும் பகுதியில் வந்தபோது அதிவேகமாக வந்த டாரஸ் லாரி, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லீலா, லாரி டயரில் சிக்கி கணவர் மற்றும் மகள்கள் கண்முன்னே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் மற்றும் இரண்டு மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பெண் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி ஓட்டுநரை பிடித்து தாக்க முயன்றனர். இதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார், லீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து கனரக லாரிகளால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மாற்று சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிறந்தநாள் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில், கணவர் மற்றும் மகள்கள் கண்முன்னே லீலா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam